Latestஉலகம்

வாடகை வீட்டில் இறந்துகிடந்த பாகிஸ்தானிய நடிகை; 8-10 மாதங்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என போலீஸ் சந்தேகம்

கராச்சி, ஜூலை-13,

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமாய்ரா அஸ்கர் அலி வாடகை வீட்டில் இறந்துகிடந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 வயது ஹுமாய்ரா பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரான கராச்சியில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் மாதக்கணக்கில் அவர் வாடகை செலுத்தாததால் அதிருப்தியடைந்த வீட்டின் உரிமையாளர் வழக்குத் தொடுத்தார்; அவ்வகையில் நீதிமன்ற ஆணைப்படி அவரை வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக போலீஸாருடன் வந்துபார்த்த போது உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

அங்கே ஹுமாய்ரா கிட்டத்தட்ட மக்கிப் போன சடலமாகக் கிடந்தார். போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி சவப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் இருந்த நிலையை வைத்து பார்க்கும் போது இரு வாரங்களுக்கு முன்பே ஹுமாய்ரா இறந்திருக்கலாம் என முதலில் போலீஸார் சந்தேகித்தனர்.

எனினும் உடற்கூராய்வில், அவர் இறந்து 8 முதல் 10 மாதங்கள் ஆகியிருக்கலாம் என தெரிய வந்தது; ஹுமாய்ராவின் உடலில் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் இறப்புக்கான உண்மைக் காரணம் இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.

ஒருவேளை 8 முதல் 10 மாதங்களுக்கு முன்பே அந்நடிகை இறந்திருந்தால், இத்தனை நாளும் அவரை குடும்பத்தார் தேடாதது ஏன்? போலீஸில் புகார் செய்யாதது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஹுமாய்ராவின் சடலைத்தைப் பெற்றுச் செல்ல குடும்பத்தார் குறிப்பாக அவரின் தந்தை முன்னதாக மறுத்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

எனினும் ஆகக் கடைசி தகவலின் படி, சடலத்தைப் பெற்றுக் கொள்ள அவரின் சகோதரர் சம்மதித்திருப்பதாக கராச்சி போலீஸ் கூறியது.

முன்னணி நடிகையின் மரணத்தில் போலீஸார் துப்புத் துலக்கினால் பல உண்மைகள் வெளிவரலாம் என பாகிஸ்தானிய ஊடகங்கள் விரிவாக செய்தி வெளியிட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!