சுபாங் ஜெயா, நவம்பர்-24, சிலாங்கூர், சுபாங் ஜெயா, SS16 பகுதியில் விலையுயர்ந்த பொருட்களை விற்கும் கடைக்குள் வாடிக்கையாளர் போல் நுழைந்த ஆடவன், 64,000 ரிங்கிட் மதிப்பிலான ரோலேக்ஸ் கை கடிகாரத்துடன் கம்பி நீட்டினான்.
நேற்று காலை கடைத் திறப்பதற்கே முன்பே வெளியில் காத்திருந்த அந்நபர், கடைத் திறந்ததும், தான் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததாகக் கூறி அங்குள்ள பொருட்கள் பற்றி விசாரித்துள்ளான்.
வாடிக்கையாளர் தானே என நினைத்து பணியாளர்களும் அவருக்கு விளக்கம் கொடுத்தனர்.
அப்போது, கீழ் தளத்தில் காத்திருக்கும் தனது முதலாளியை கூட்டி வர செல்வதாகக் கூறி, அவ்வாடவன் அங்கிருந்து அவசர அவசரமாகக் கிளம்பினான்.
அப்போது பணியாளர் கைப்பேசியில் பேசிக் கொண்டிந்ததால் நடந்தவற்றை கவனிக்கவில்லை.
இந்நிலையில் பிற்பகல் வாக்கிலேயே ரோலேக்ஸ் கை கடிகாரம் காணாமல் போனது தெரியவந்தது.
திருடுபோனது, Rolex Datejust 36 Oystersteel ரகத்தைச் சேர்ந்த கை கடிகாரமாகும்.
அதனைத் திருடிய ஆடவனுக்கு போலீஸ் வலை வீசியுள்ளது.