
பேங்கோக், ஜூலை-26- தாய்லாந்தில் விவாகரத்துக்குப் பிறகு பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான ஆடவர், ஒரு மாதமாக உணவேதும் உட்கொள்ளாமல் மது மட்டுமே அருந்தி மரணமடைந்துள்ளார்.
44 வயது அந்நபர் மனைவியைப் பிரிந்ததிலிருந்து விரக்தியடைந்து, உணவு உட்கொள்ள மறுத்து வந்துள்ளார்.
தினமும் தந்தைக்காக உணவுத் தயாரித்து ஊட்டி விடுவதற்குக் கூட அவரின் 16 வயது மகன் முயன்றுள்ளான்.
ஆனால் பிடிவாதம் காட்டிய தந்தைக்கு தினமும் பீர் மட்டுமே ‘ஆறுதலாக’ இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளியிலிருந்து திரும்பிய மகன், படுக்கையறையில் தந்தை பேச்சு மூச்சின்றி கிடந்ததை பார்த்துள்ளான். திடீரென வலிப்பும் வந்துவிட்டது.
உடனடியாக அதிகாரத் தரப்பை மகன் உதவிக்கு அழைத்த நிலையில், அவர்கள் வருவதற்குள் அந்நபர் இறந்து விட்டார்.
குறுகலான அறை முழுக்க 100-க்கும் மேற்பட்ட காலி பீர் (beer) பாட்டில்கள் சிதறிகிடந்தது, மருத்துவக் குழுவை அதிர்ச்சியடையச் செய்தது.
அளவுக்கதிகமாக மது அருந்தியதே மரணத்திற்குக் காரணம் என நம்பப்பட்டாலும், உண்மைக் காரணத்தைக் கண்டறிய சடலம் சவப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.