
கோத்தா பாரு , பிப் 5 – விடுமுறையில் தாய்லாந்திற்கு செல்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதோடு ஆபத்து நிறைந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் (Datuk Mohd Yusoff Mamat) பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
தாய்லாந்தில் நரதிவாட்டில் (Narathiwat) பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதோடு ஆகக் கடைசியாக ஜனவரி 14ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் மாண்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார்.
தாய்லாந்திற்கு சுற்றுலா செல்வதை பொதுமக்கள் விரும்புவதால் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் . அந்நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.
அங்கு எப்போது என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியவில்லை. இது போன்ற சம்பவங்கள் இந்த ஆண்டு இருமுறை நடந்துள்ளது. முடிந்தவரை மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதோடு ஆபத்து நிறைந்த இடத்திற்கு வருகை புரிவதை தவிர்க்கும்படி முகமட் யூசோப் கேட்டுக்கொண்டார்.
மலேசியர்கள் அந்த அண்டை நாட்டின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதோடு இரு நாடுகளின் அரசாங்கத்திற்கும் சிரமத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும்.