வெளிநாட்டு ஊழியர்களுக்கான இ.பி.எப் பங்களிப்பு 2 விழுக்காடாக இருக்க வேண்டும் – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், பிப் 3 – வெளிநாட்டு ஊழியர்களுக்கான இ.பி.எப் பங்களிப்பு 2 விழுக்காடாக இருக்க வேண்டும் என்பதோடு அவை அவசியம் அமல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். தொடக்கத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான இ.பி.எப் தொகையை அமைச்சரவை 12 விழுக்காடாக பரிந்துரை செய்தது. எனினும் வாணிக தொழில்துறையின் ஆலோசனைகளை பரிசீலித்த பின் அவர்களுக்கான இ.பி.எப் தொகை 2 விழுக்காடாக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.
நிலைமை சீரான பின்னர் இந்த தொகை 4 விழுக்காடாக அதிகரிக்கலாம். ஆனால் இப்போதைக்கு 2 விழுக்காடு தொகை நிலைநிறுத்தப்படும் என சீன வர்த்தக கூட்டமைப்பின் ஏற்பாட்டிலான சீன புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது அன்வார் தெரிவித்தார். இதனிடையே நிரந்தர குடியிருப்பு தகுதி அல்லாத வெளிநாட்டு பணியாளர்களுக்காக முன்மொழியப்பட்ட கட்டாய இ.பி.எப் பங்களிப்பை மறுபரிசீலனை செய்யும்படி இதற்கு முன் சீன வாணிக தொழில் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ இங் யீ பைங் ( Ng Yih Pyng ) அரசாங்கத்திற்கு வலியுறுத்தினார். தற்போதைய சவாலான வர்ததக சூழலில் ஏற்கனவே அதிகரித்து வரும் செலவினங்களுடன் போராடும் முதலாளிகளுக்கு இந்த நடவடிக்கை கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்