
புக்கிட் பெண்டேரா, மார்ச்-14 – இந்நாட்டு இந்தியர்களுக்கு வாடகை வீட்டிலிருந்து வேலை கிடைப்பது வரை குதிரைக் கொம்பாக உள்ளது.
இனப் பாகுபாடு என்ற ஒரே விஷயம் அதற்கு குறுக்கே நிற்கிறது.
இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என, பினாங்கு, புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீன அப்துல் ரஷிட் வலியுறுத்தியுள்ளார்.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, ஒட்டுமொத்த சமுதாயத்தையே ஒதுக்குவது கூடாது என்றார் அவர்.
உணவு மற்றும் பான நிறுவனமான MIXUE Malaysia-வின் கிளைக் கடையொன்றின் அண்மைய வேலை விளம்பரத்தில் இனப் பாகுபாட்டைக் காட்டும் வகையில் ‘அனுபவமுள்ள மலாய்க்காரர்களும் சீனர்களும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்” என எழுதப்பட்டிருந்தது சர்சையானது.
இதனால் “ஏன் இந்தியர்களுக்கு அனுபமோ திறமையோ இல்லையா” என வலைத்தளங்களில் மக்கள் கொந்தளித்தனர்.
அது குறித்து வெளியிட்ட டிக் டோக் வீடியோவில் தான் ஷெர்லீனா அக்கோரிக்கையை வலியுறுத்தினார்.
ஏற்கனவே பல முதலாளிமார்கள், செலவை மிச்சப்படுத்தும் நோக்கில் உள்நாட்டினரை விட்டு விட்டு வெளிநாட்டிரை வேலைக்கு எடுப்பதிலேயே கவனமாக உள்ளனர்.
இது போதாதென்று, இப்போது இன ரீதியாகவும் உள்நாட்டினரை முதலாளிமார்கள் புறக்கணிக்கின்றனர்.
ஊழியர்களை தொழில்முறையாக நிர்வகிப்பதில் அந்தந்த முதலாளிகள் தான் சிறந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும்; அதை விடுத்து குறுக்கு வழியில் எடுத்த எடுப்பிலேயே இப்படி ஒதுக்குவது முறையல்ல.
இது ஒரு தொடர்கதையாகி வருகிறது; எனவே வேலைக்கு ஆள் எடுப்பதில் இனப் பாகுபாடு காட்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..
சட்ட அமுலாக்கமே இப்பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியுமென ஷெர்லீனா கேட்டுக் கொண்டார்.