
ஷா ஆலாம், ஜனவரி-19-சிலாங்கூர், ஷா ஆலாமில், 13 வயது சிறுமி கடத்தப்பட்டதாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஞாயிற்றுக்கிழமை மாலை, செக்ஷன் 25-ல் உள்ள ஒரு பள்ளி அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பக்க இருக்கையில் அச்சிறுமி அமர்ந்திருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது.
சிறுமி, காரினுள் கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், அடையாளம் தெரியாத ஒருவன் காருக்குள் நுழைந்தது விசாரணயில் தெரிய வந்ததாக, ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் கூறியது.
சிறுமி கத்திய போதுதான் உள்ளே யாரோ இருப்பதை சந்தேக நபர் உணர்ந்ததாகவும், ஆனால் சிறுமியை அவன் எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிறகு, பொது மக்கள் வழங்கிய தகவலின் பேரில், சம்பவ இடத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஓர் உணவகம் அருகே காருடன் சிறுமி பாதுகாப்பாக கண்டெடுக்கப்பட்டாள்.
சிறுமிக்கு எந்த உடல் காயமும் ஏற்படவில்லை; என்றாலும் சம்பவத்தால் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் கூறியது.
சந்தேக நபருக்கு வலைவீசப்பட்டுள்ளது.



