கோலாலம்பூர், செப்டம்பர் 21 – வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நாடு தழுவிய நிலையில் ஆறாம் ஆண்டு, படிவம் 3 மாணவர்களுக்காக தேசிய தேர்வுகளை ஸ்ரீ முருகன் நிலையம் நேரடியாகவும், இயங்கலை வாயிலாகாவும் நடத்தவுள்ளது.
இத்தேர்வுகளுக்குத் தயார் செய்வதன் வாயிலாகக் கிடைக்கப்பெறும் நன்மைகளிலிருந்து மாணவர்கள் விடுபடாமலிருக்க இந்த தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக அந்நிலையம் கூறியது.
முன்னதாக, கல்வி அமைச்சு 2021ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வையும், 2022ஆம் ஆண்டு பி.தி.3 தேர்வையும் அகற்றியது.
இந்நிலையில், தற்போது இருக்கும் தேர்வில்லா கல்வி முறையான ‘holistic approach’ அதாவது, பொது நிலையான PBS அடிப்படையில் பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த மதிப்பீட்டு முறைகள் நடைபெற்று வருகின்றன.
எனினும், தேசிய நிலையிலான தேர்வைப் போல மாணவர்களின் அடைவு நிலையைக் கண்டறிவதில் இது, எதிர்ப்பார்க்கப்பட்ட பலனை ஏற்படுத்தவில்லை என்கிறார் ஸ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா.
மாணவர்களின் எழுதுதல், வாசித்தல், எண்ணுதல் ஆகிய அடிப்படை திறன்களை உறுதி செய்யும் வகையில், தேசிய அளவிலான யூ.பி.எஸ்.ஆர் மற்றும் பி.தி.3 இரண்டு மதிப்பீட்டுத் தேர்வுகளையும் மீண்டும் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அண்மையில் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஷாஹிட் ஹமிடியும் தனது பரிந்துரையை முன்வைத்தார்.
இந்த அடிப்படை திறன்களிலுள்ள பின்னடைவால், கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கு 10,177 மாணவர்கள் அமரவில்லை என்பதை மறுப்பதற்கில்லை.
இத்தேர்வுகள் இரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், தேர்வினை முன்னோக்கி சுய கால அட்டவணையைப் பின்பற்றுதல், பாடங்களை மீள்பார்வை செய்தல், பயிற்சி கேள்விகள் செய்தல் என மாணவர்கள் தங்களைத் தயார் செய்திருப்பார்கள்.
இம்மாதிரியான திறன்கள்தான் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பேருதவியாக இருக்கும்.
ஆகையால்தான், ஸ்ரீ முருகன் நிலையம், அதன் national examination திட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக சுரேன் கந்தா தெரிவித்தார்.
எதிர்வரும் 6ஆம் திகதி அக்டோபர் மாதம், நாடு தழுவிய நிலையில் ஆறாம் ஆண்டு மற்றும் படிவம் 3 மாணவர்களுக்கான தேசிய தேர்வுகள் hybrid முறையில் நடைபெறும் என இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.
இத்தேர்வுகள் அனைத்தும் தெரிவுவிடை வினா அதாவது objective முறையில் நடத்தப்படும் என்றார், அவர்.
எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை இத்தேர்வுகளுக்கான பதிவு காலம் திறக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வில் பங்குபெற விருப்பம் உள்ள தமிழ்ப்பள்ளி, தேசியப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்களும் மேல் விவரங்களுக்கு, திரையில் காணும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.