
கோலாலம்பூர், மார்ச்-18-இந்த நோன்புப் பெருநாளின் உச்ச நேரங்களில் நாடளாவிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அக்காலக் கட்டத்தில் 3.49 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM கணித்துள்ளதே அதற்குக் காரணம்.
அதில், முதன்மை நெடுஞ்சாலையான PLUS நெடுகிலும் மட்டுமே 2.3 மில்லியன் வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த ஊர்களுக்கான _‘Balik Kampung’_ பயணங்கள் அதிகரிப்பதன் காரணமாக, முக்கிய நெடுஞ்சாலைகளில் நீண்ட நேர நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இன்று மார்ச் 18-ஆம் தேதியே பள்ளி விடுமுறை தொடங்கி விட்டதாலும், 50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவு வழங்கப்பட்டுள்ளதாலும், இன்றே இந்த சொந்த ஊர் பயணங்கள் பரபரப்படைந்துள்ளன.
எனவே, பயணிகள், உச்ச நேரங்களைத் தவிர்க்க முன்கூட்டியே பயணத்தை திட்டமிட வேண்டும் என்றும், போக்குவரத்து அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் LLM அறிவுறுத்தியது.
பாதுகாப்பான மற்றும் சீரான பயணத்திற்காக, வாகன பராமரிப்பும் அவசியம் எனவும் நினைவூட்டப்பட்டுள்ளது.



