
ஜெம்போல், மார்ச்-3 – ஹரி ராயா செலவுக்காக 30,000 ரிங்கிட் கடன் வாங்க எண்ணிய 55 வயது ஆடவர், இல்லாத ஒரு கடன் திட்டத்தில் 28,000 ரிங்கிட்டுக்கும் மேல் பறிகொடுத்துள்ளார்.
இத்தனைக்கும் அவர் ஒரு வங்கிப் பணியாளர்.
இம்மோசடி சம்பவம் நெகிரி செம்பிலான் ஜெம்போலில் நிகழ்ந்துள்ளது.
பிப்ரவரி 12-ஆம் தேதி facebook-கில் பார்த்த விளம்பரத்தை நம்பிய அவ்வாடவர், WhatsApp வாயிலாக ஒரு முகவருடன் தொடர்புக் கொண்டுள்ளார்.
கடனுக்கு விண்ணப்பிக்க ஒப்புக்கொண்டவருக்கு, விண்ணப்பக் கட்டணமாக 460 ரிங்கிட் விதிக்கப்பட்டது.
அதனை, கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றிய அவ்வாடவர், 3 நாட்களில் மேலும் பல தடவை பணத்தைச் செலுத்த கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அப்படி அவர் செலுத்திய மொத்தப் பணம் 28,112 ரிங்கிட்டாகும்.
30,000 ரிங்கிட் கடனுக்கு விண்ணப்பித்தவர், அது கைக்கு வரும் முன்பு, தானே 28,000 ரிங்கிட்டை வெளியாக்க வேண்டிய நிலை ஏற்பட்டும் அவருக்கு சந்தேகம் வரவில்லை.
கடைசியில், மேலும் 6,000 ரிங்கிட் செலுத்த வேண்டுமென கூறப்பட்ட போதே, தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அவர் போலீஸில் புகார் செய்தார்.
அம்மோசடி, குற்றவியல் சட்டத்தின் 420-ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக ஜெம்போல் போலீஸ் கூறியது.