கோலாலம்பூர், செப்டம்பர் -19, பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் பரிமாறாத அனைத்து உணவகங்களுக்கும் உணவுத்தொழில் நிறுவனங்களுக்கும் ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்கும் பரிந்துரையை, அமைச்சரவை நிராகரித்துள்ளது.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அதனை உறுதிப்படுத்தினார்.
நடப்பில் உள்ளது போலவே தன்னார்வ அடிப்படையில் ஹலால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையைத் தொடர, அமைச்சரவை ஏகமனதாக முடிவுச் செய்துள்ளது.
முஸ்லீம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க விரும்பினால், உணவகங்கள் தாராளமாக ஹலால் சான்றிதழக்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே, அதில் யாரையும் கட்டாயப்படுத்த அரசாங்கம் எண்ணவில்லை என அவர் சொன்னார்.
பன்றி இறைச்சி மற்றும் மதுபானங்களைப் பரிமாறாத அனைத்து உணவகங்களுக்கும் ஹலால் சான்றிதழைக் கட்டாமாக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக, சமய விவகாரங்களுக்கான பிரதர் துறை அமைச்சர் நாயிம் மொக்தார் (Na’im Mokhtar) செப்டம்பர் 6-ம் தேதி கூறியிருந்தார்.
அன்றிலிருந்து அது தொடர்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
அப்பரிந்துரை தொடர்பில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக DAP உதவித் தலைவர் திரேசா கோக், போலீஸ் விசாரணைக்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.