கோலாலம்பூர், டிசம்பர்-18, நாட்டில் இவ்வாண்டு அக்டோபர் 30 வரையில் 422 முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு, 46.1 மில்லியன் ரிங்கிட் அரசாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் இந்து ஆலயங்கள் மட்டும் 147 ஆகும்.
அவற்றுக்கு மொத்தமாக 19.1 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டதாக, KPKT எனும் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு தெரிவித்தது.
மாநிலம் வாரியாகப் பார்த்தால் ஆக அதிகமாக சிலாங்கூரில் 33 இந்து ஆலயங்களுக்கும், பேராக்கில் 32 கோவில்களுக்கும், ஜோகூரில் 19 ஆலயங்களுக்கும் மானியம் வழங்கப்பட்டது.
மற்றபடி, மலாக்காவில் 15, நெகிரி செம்பிலானில் 14, கெடாவில் 12, பஹாங்கில் 8, கோலாலம்பூர்-புத்ராஜெயா-லாபுவான் கூட்டரசு பிரதேசங்களில் 6, பினாங்கில் 3-மாக ஆலயங்களுக்கு நிதியுதவிகள் அங்கீகரிக்கப்பட்டன.
இந்துக்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ள கிளந்தானில் கூட 2 ஆலயங்களுக்கு அரசாங்க மானியம் கிடைத்துள்ளது.
சபாவிலும் 3 ஆலயங்கள் நிதியுதவியைப் பெற்றுள்ளதாக, மேலவையில் செனட்டர் Dr ஆர்.லிங்கேஷ்வரன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், அமைச்சு கூறியது.
ஆக அதிகமாக சில கோயில்களுக்கு தலா 250,000 ரிங்கிட்டும், ஆகக் குறைவாக ஓர் ஆலயத்திற்கு 14,495 ரிங்கிட்டும் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.