Latestமலேசியா

அக்டோபாரின் ஆசியான் மாநாட்டில் பங்கேற்க வருமாறு ட்ரம்புக்கு பிரதமர் அன்வார் அழைப்பு

கோலாலம்பூர், ஜூலை-11 – அக்டோபரில் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் – அமெரிக்கா மற்றும் கிழக்காசிய உச்ச நிலை மாநாடுகளில் பங்கேற்குமாறு, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்புக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அன்வாரை மரியாதை நிமித்தம் சந்தித்த போது, அந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

ஒருவேளை அது நடந்தால், அமெரிக்க அதிபர் என்ற முறையில் ட்ரம்பின் முதல் மலேசியப் பயணமாக அது அமையும்.

இவ்வேளையில் அமெரிக்காவுடனான தொடர்ச்சியான – நெருக்கமான ஒத்துழைப்பானது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தோ-பசிபிக் வட்டார நிலைத்தன்மை, செழிப்பு மற்றும் அமைதிக்கும் பங்களிக்கும் என, அச்சந்திப்பின் போது பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டிடத்தில் சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு, இந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்ற பிறகு ரூபியோவின் முதல் ஆசியா பயணத்தின் ஒரு பகுதியாகும்.

டிஜிட்டல் முதலீடு, AI, பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற துறைகளில் பரந்த ஒத்துழைப்பையும் இந்த விவாதங்கள் உள்ளடக்கியிருந்தன.

தவிர, பாலஸ்தீனம், யுக்ரேய்ன் மற்றும் மியன்மாரில் உள்ள சூழ்நிலைகள் உட்பட, வட்டார பிரச்னைகள் குறித்தும் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ஜூலை 8 முதல் 11 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் 58-ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் அதன் தொடர்புடைய கூட்டங்கள் உட்பட, 2025-ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக, உயர்மட்டக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக ரூபியோ கோலாலம்பூர் வந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!