
கோலாலம்பூர், பிப்ரவரி-17 – பல்லின மக்கள் ஒற்றுமையாகவும் சகிப்புத்தன்மையுடனும் வாழும் இம்மலேசியத் திருநாட்டில், அதனை சீர்குலைக்கும் வகையில் சில தரப்பினர் நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.
ஆகக் கடைசியாக, செப்பாங் சோள வியாபாரி ஒட்டுமொத்த இந்தியர்களையும் இழிவுப்படுத்தி, மனதைப் புண்படுத்தியுள்ளார்.
அவர் பயன்படுத்திய வார்த்தை இந்தியர்கள் மத்தியில் அவச்சொல்லாகப் பார்க்கப்படுகிறது; அதன் பயன்பாடு ஏற்கனவே பலமுறை சர்ச்சையான போதும், இதுவரை தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மக்கள் புகாரளிக்கும் வரை அதிகாரத் தரப்பு காத்திருக்குமா என, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான MAHIMA-வின் தலைவர் டத்தோ என்.சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சோள வியாபாரியின் செயல் வைரலாகி 3 நாட்களுக்கும் மேலாகி விட்டது; இன்னும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சும் அதிகாரத் தரப்பும் எதற்காகக் காத்திருக்கின்றன?
இது போன்ற விஷயங்களில் அதிகாரப்பூர்வ புகார் கிடைக்கும் வரை காத்திருந்தால், நிலைமை கை மீறி போய் விடும் என்பது அமைச்சுக்குத் தெரியாதா?
இதனால் தான் மக்கள் அதிருப்தி அடைகின்றனர் என சிவக்குமார் காட்டமாகக் கூறினார்.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவவணன் இதை கண்டித்துள்ளார். அவரைப் போன்று பிற மக்கள் பிரதிநிதிகளும் இதனை கண்டிக்க வேண்டும்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் இவ்விவகாரத்தை மக்களவைக்குக் கொண்டுச் செல்ல வேண்டும் என்றும் சிவகுமார் வலியுறுத்தினார்.
அதே சமயம், உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களைத் தொடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஒருமைப்பாட்டு அமைச்சு நல்லிணக்க அமுலாக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
இது தவிர, இன விவகாரங்களை ஒரே அமைச்சின் கீழ் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டுமென்றும் அவர் பரிந்துரைத்தார்.