வாஷிங்டன், நவம்பர்-17 – அணு ஆயுதங்களின் கட்டுப்பாட்டை AI அதிநவீனத் தொழில்நுட்பத்திடம் ஒருபோதும் ஒப்படைக்க மாட்டோம் என, அமெரிக்காவும் சீனாவும் இணக்கம் கண்டுள்ளன.
பெரு, லீமாவில் APEC மாநாட்டுக்கு வெளியே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் Xi Jinping இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் அவ்விணக்கம் காணப்பட்டது.
என்னதான் அவ்விரு வல்லரசு நாடுகளும் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டாலும், மனிதகுல பாதுகாப்பு போன்ற முக்கிய விவகாரங்களில் கூட்டுப் பொறுப்பு அடிப்படையில் இணைந்துப் பணியாற்ற அவை முன்வந்துள்ளன.
எனினும், AI-யிடம் அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்படைக்கப்பட்டு விடுமோ என்ற அவசரக் கவலையால் அவ்விணக்கம் காணப்படவில்லை.
மாறாக, அத்தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி கண்டு வரும் நாடுகள் என்ற வகையில் செய்துகொண்ட பரஸ்பர புரிந்துணர்வே அதுவென வெள்ளை மாளிகைக் கூறியது.
தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், அணு ஆயுதங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற கருத்தை இரு உலகத் தலைவர்கள் முன்வைத்திருப்பது பாராட்டைப் பெற்றுள்ளது.
பதவி விலகிச் செல்லும் பைடனுக்கு, சீன அதிபருடான கடைசி சந்திப்பாக இந்த APEC மாநாடு அமைந்துள்ளது.