
கெரியான், ஆகஸ்ட்-5- அண்மைய மேக விதைப்பு நடவடிக்கையின் விளைவாக அதிக மழை பெய்த போதிலும், புக்கிட் மேரா அணையின் நீர்மட்டம் cut-off எனும் வெட்டுப் புள்ளியிலேயே இருப்பதால், கெரியான் நீர்ப்பாசனத் திட்டத்திற்கான நீர்ப்பாசனம் நிறுத்தப்பட்டுள்ளது.
பேராக் மாநில உள்கட்டமைப்பு, எரிசக்தி, நீர் மற்றும் பொதுப் போக்குவரத்துத் துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ முஹமட் நிசார் ஜமாலுடின் (Datuk Seri Mohammad Nizar Jamaluddin) கூறினார்.
அணையின் ஏரியிலிருந்து நீர்ப்பாசனம் செய்வதற்கான தற்போதைய SOP நடைமுறை, cut-off அளவை 20 அடியாக அல்லது 6.09 மீட்டராக நிர்ணயிக்கிறது.
இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 19.80 அடியிலிருந்து 20.00 அடியாக அதிகரித்துள்ளது; அணையின் நீர் சேமிப்புத் திறனும் 6.65 மில்லியன் கன மீட்டரிலிருந்து 7.25 மில்லியன் கன மீட்டராக உயர்ந்துள்ளதாக நிசார் தெரிவித்தார்.
இருப்பினும், அணையின் தற்போதைய நிலை, SOP-யில் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, பாசன வழங்கல் cut-off மட்டத்திலேயே உள்ளது என்றார் அவர்.
நேற்று மதியம் 12 மணியளவில் நடத்தப்பட்ட மேக விதைப்பு நடவடிக்கையின் விளைவாக, புக்கிட் மேரா அணையின் பல நீர் தேக்கங்களில் மழை பெய்தது;
குறிப்பாக, Pondok Tanjung Station நிலையத்தில் நீர்வரத்து குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது.