கோலாலம்பூர், ஜனவரி-6, தமிழ் நாட்டின் அடுத்த முதல் அமைச்சராக பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் கே. அண்ணாமலையைத் தாம் ஆதரித்ததை, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் தற்காத்துப் பேசியுள்ளார்.
ஜனவரி 4-காம் தேதி பினாங்கில் நடைபெற்ற தமிழ் வம்சாவளி மாநாட்டில் அவ்வாறு பேசியதால் தமக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.
அண்ணாமலையை ஆதரித்து பேசியதால், ராயர் திடீர் வெளியேற்றம் செய்யும் அளவுக்கு மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டதாக, DAP கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி நேற்றிரவு குற்றம் சாட்டியிருந்தார்.
ராயரின் பேச்சால் சபையில் கூச்சல் ஏற்பட்டு, அவரின் பேச்சை நிறுத்துமாறு கண்டன குரல்கள் எழுந்ததோடும், மன்னிப்புக் கேட்க வற்புறுத்தப்பட்டதாகவும் சதீஸ் கூறினார்.
அதே சமயத்தில் தமிழர்களின் பெருமை, பாரம்பரியம், மதச்சார்பின்மை மற்றும் இந்திய அரசியல் விவாகரங்களில் ஆழமான தெளிவில்லாமல் ராயர் பேசியிருப்பதாகவும் அவர் சாடியிருந்தார்.
ஆனால், அக்குற்றச்சாட்டுகளை ராயர் திட்டவட்டமாக மறுத்தார்.
“என உரையை நான் முழுவதுமாக முடித்து விட்டு, மதிய உணவு வரை மண்டபத்தில் தான் இருந்தேன்” என்றார் அவர்.
என் உரையை முடிக்கும் போது பெரும் கரகோஷமும் வரவேற்பும் கிடைத்தது என்பதே உண்மை; எனவே சதீஸ் எதையும் சொல்லும் முன் தகவல்களை உறுதிச் செய்து கொள்ள வேண்டுமென ராயர் சொன்னார்.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நியாயம் கிடைக்க அண்ணாமலை போராடுகிறார்.
அதற்காக, தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டவர் அவர்.
எனவே தான், ஒரு வழக்கறிஞர் மற்றும் மனித உரிமைப் போராளி என்ற வகையில் அண்ணாமலையை அடுத்த தமிழக முதல்வராக தாம் ஆதரிப்பதாக தமது சுய கருத்தை வெளிப்படுத்தியதாக ராயர் கூறினார்.