
கோலாலம்பூர், ஜனவரி-31 – ஜனநாயக செயல் கட்சியான DAP, இன அடிப்படையிலான அடையாளத்தை அல்லாமல், திறன், நேர்மை மற்றும் சேவை செய்யும் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலான தலைமைத்துவத்தையே எப்போதும் ஆதரித்து வருகிறது.
தலைமைத்துவம் என்பது ஓர் இன உரிமை அல்ல – அது நம்பிக்கை மற்றும் திறமை மூலம் சம்பாதிக்கப்படுகிறது.
எனவே, பினாங்கில் ஏன் இந்தியர் ஒருவர் முதல் அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்ற கேள்வியே அடிப்படையற்றது என, DAP-யின் 3 இளம் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன், சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் ஆகியோரோ அம்மூவராவர்.
பினாங்கில் இந்திய முதல் அமைச்சர் என கேள்வி கேட்கும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியான MIPP, முதலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆளும் மாநிலங்களில் அது குறித்து கேட்கட்டும்.
கெடா, திரங்கானு, கிளந்தான் மாநிலங்களில் இந்தியர் ஒருவரை முதல் அமைச்சர் பதவியில் அமர்த்தி விட்டு, பிறகு பினாங்கு மாநில பஞ்சாயத்துக்கு வாருங்கள் என அம்மூவரும் சவால் விட்டனர்.
பினாங்கில், இந்தியச் சமூகத்துக்கு துணை முதல் அமைச்சர் பொறுப்பை உருவாக்கித் தந்ததே DAP-தான் என்பதை மறந்திட வேண்டாமென, அக்கூட்டறிக்கையில் அவர்கள் சுட்டிக் காட்டினர்.
பினாங்கில் ஏன் இந்தியர் ஒருவர் முதல் அமைச்சராக நியமிக்கப்படவில்லை என, MIPP தகவல் பிரிவுத் தலைவர் சுதன் மூக்கையா முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.