
பட்டவொர்த், ஜூலை—24- தென் மாநிலங்களுக்கு கஞ்சா பூக்களைக் கடத்தும் 2 ஆடவர்களின் முயற்சியை, கெடா, சுங்கை பட்டாணி டோல் சாவடியில் சுங்கத்துறை முறியடித்துள்ளது.
உளவுத் தகவல்களின் அடிப்படையில் பினாங்கு சுங்கத் துறையின் போதைப்பொருள் பிரிவு மேற்கொண்ட சோதனையில், 5.1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலான மதிப்பைக் கொண்ட அந்த கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வந்த கஞ்சாவை ஏற்றிக் கொண்டு காரொன்று தென் மாநிலம் நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து சுங்கத் துறை அச்சோதனையில் இறங்கியது.
முதலில் ஜித்ராவில் காணப்பட்ட அக்காரை, சுங்கை பட்டாணி டோல் சாவடி வரை சுங்கத் துறை துரத்திச் சென்றது; அங்குத் தயாராக இருந்த மற்ற அதிகாரிகள் அக்காரை மடக்கிப் பிடித்தனர்.
அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக, வாடகைக்கு எடுக்கப்பட்டக் காரிலில் 30 வயதிலான அவ்விரு ஆடவர்களும், அந்தப் போதைப்பொருட்களை கடத்தி வந்துள்ளனர்.
1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.