
கோலாலம்பூர், அக் 7 –
Global Travel Meet கொண்டாட்டத்தை முன்னிட்டு மலேசிய சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட விருந்து நிகழ்வில் மதுபானம் பரிமாறப்பட்டது குறித்து சுற்றுலா, கலை, பண்பாடு அமைச்சு மற்றும் அதன் அமைச்சர் தியோங் கிங் சிங்கிற்கு ( Tion King Sing) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிகாரப்பூர்வ விருந்தில் மதுபானத்திற்கு அனுமதியில்லை என்ற அரசாங்கத்தின் நிலையை அன்வார் சுட்டிக்காட்டியதாக பெர்னாமா தகவல் வெளியிட்டது. நிகழ்ச்சி முடிவுற்ற பின்னரே அந்த விருந்தில் மதுபானம் இருந்ததாக சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு அமைச்சு விளக்கம் அளித்திருந்தாலும் இது முற்றிலும் பொருத்தமற்றது .
மேலும் அதே நிகழ்வில்தான் மதுபானம் பரிமாறப்பட்டது என பெர்னாமாவின் X கணக்கில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க நிகழ்வுகளில் மதுபானங்கள் ஏன் பரிமாறப்படுகின்றன என்று கேள்வி எழுப்பி, இந்த விவகாரம் கலாச்சார விதிமுறைகள் மற்றும் அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி, முகநூலில் ஒரு காணொளியை இதற்கு முன்னர் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் ( Mas Ermieyati Samsudin ) பதிவேற்றியிருந்தார்.