கோலாலம்பூர், நவம்பர்-21 – அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில், இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 45 போலீஸ்காரர்களும் அதிகாரிகளும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைதுச் செய்யப்பட்டனர்.
அதே காலக்கட்டத்தில் 27 போலீஸ்காரர்கள் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு, 13 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதாக, தேசியப் போலீஸ் படையின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை (Datuk Seri Ayob Khan Mydin Pitchay) கூறினார்.
அதே 9 மாதங்களில், பல்வேறு விதிமீறல்களுக்காக புக்கிட் அமான் போலீஸ் நெறிமுறை மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை 1,557 கட்டொழுங்கு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.
1,118 தொடக்கக் கட்ட விசாரணை அறிக்கைகளும் திறக்கப்பட்டுள்ளன.
ஆகவே, அதிகார முறைகேடு, லஞ்சம் வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடும் போலீஸ்காரர்கள் எந்த அதிகாரத்திலிருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்நிலை போலீசார் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து விட்டு, அதிகாரிகளை விட்டு விடும் இரட்டை நிலைப்பாடு கூடாது என டத்தோ ஸ்ரீ ஆயோப் போலீசை அறிவுறுத்தினார்.