
கோலாலம்பூர், நவம்பர்-20 – நாட்டிலுள்ள அரசாங்க மருத்துவமனைகளின் தரவுகளின்படி 2020 முதல் 2024 வரை, 19 வயதுக்குட்பட்ட 16,951 இளம் பெண்கள் திருமணமாகாமலேயே கர்ப்பமாகியுள்ளனர்.
அந்த அதிர்ச்சித் தகவலை மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்சி ஷுக்ரி மக்களவையில் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை அக்காலக்கட்டத்தில் மொத்தம் 41,842 இளம் பெண்கள் கர்ப்பமாகியதில் ஒரு பகுதியாகும்
அந்த 41842 பேரில், மலாய் இளம் பெண்கள் சுமார் 50 விழுக்காட்டினர் ஆவர்.
மற்ற இனங்களில், இபான் 11%, தீபகற்ப பூர்வக்குடியினர் 9%, சீனர் 5%, இந்தியர் 3% எனப் பதிவாகியுள்ளது.
இளம் தலைமுறைக்கு இனப்பெருக்க ஆரோக்கியக் கல்வி, சமூக விழிப்புணர்வு, குடும்ப ஆதரவு ஆகியவை அவசியம் என்பதை இது உணர்த்துவதாக நேன்ஸி கூறினார்.
இப்பிரச்னையைக் கையாள அனைத்து தரப்பினரும் கூட்டாக ஒத்துழைக்க வேண்டும்.
இந்நிலையில், சமூக நிலைத்தன்மைக்காக குடும்பங்களை வலுப்படுத்தும் நோக்கில், தேசியக் குடும்பக் கொள்கை மற்றும் நாட்டின் குடும்பச் செயல் திட்டத்தை அமைச்சு வருவாக்கி வருவதாகவும் அவர் சொன்னார்.



