அனைவருக்கும் என்றில்லாமல் இலக்கிடப்பட்ட EPF சந்தாத்தாரர்களுக்கு மட்டும் RM100 வழங்கியிருந்தால் கூடுதல் தாக்கம் ஏற்பட்டிருக்கும்; சார்ல்ஸ் சாந்தியாகோ கருத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட்-6 – SARA திட்டத்தின் கீழ் RM100 ரொக்க உதவி மக்களுக்குத் தற்காலிக நிம்மதியைத் தரலாம், ஆனால் மலேசியாவின் ஓய்வூதிய நெருக்கடியைச் சரிசெய்யும் நல்லதொரு வாய்ப்பை அரசாங்கம் தவற விட்டிருப்பதாக கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாந்தியாகோ கூறுகிறார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் என்றில்லாமல் 10,000 ரிங்கிட்டுக்கும் குறைவான சேமிப்புள்ள 63 இலட்சம் EPF உறுப்பினர்களின் கணக்கில் நேரடியாக இந்த தொகையைச் சேர்த்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்துகிறார்.
“இது பாதுகாப்பு வலை இல்லை – மாறாக காத்திருக்கும் ஒரு நெருக்கடி” என அவர் எச்சரிக்கிறார்.
EPF சேமிப்பு என்பது பணி ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பு தரவேண்டிய ஒன்றாகும்; தினசரி வாழ்க்கைக்கானது அல்ல.
ஆனால் உயராத சம்பளங்கள், குறைவான பாதுகாப்புகள் மற்றும் கடந்த கால அரசுக் கொள்கைகள் இதை ‘ஆபத்தாக’ மாற்றியுள்ளன.
எனவே சமூகப் பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்று சார்ல்ஸ் கூறுகிறார்.
அரசாங்கமும், முதலாளிகளும் EPF-க்கு முறைப்படி கூடுதலாகச் செலுத்த வேண்டும்;
வலிமையான சமூக பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்;
சம்பளங்களை உயர்த்தி, வருமான இடைவெளியைக் குறைக்கும் கொள்கைகள் அமல்படுத்தப்பட வேண்டும்;
என்பனவற்றை சார்ல்ஸ் பரிந்துரைக்கிறார்.
‘கண்ணியமான’ ‘மதிப்பான’ ஓய்வு வாழ்க்கைக்கு முதலீடு செய்யும் சிங்கப்பூரின் CPF மாதிரியையும் அவர் பாராட்டினார்
அண்மையில் மலேசியர்களுக்கு அசாதாரண அங்கீககாரமாக வழங்கிய அறிவிப்பில், MyKad அட்டை வாயிலாக ஆகஸ்ட் 31 முதல் RM 100 ரிங்கிட் போடப்படும் என பிரதமர் கூறியிருந்தார்.