
பட்டவொர்த், ஜனவரி-28 – பினாங்கில் BORR எனப்படும் பட்டவொர்த் வெளிவட்ட சாலையில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கையில், 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதோடு கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக நம்பப்படும் ஓர் ஆடவனை போலீஸார் கைதுச் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரை மேற்கொள்ளப்பட்ட அச்சோதனை நடவடிக்கையின் போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 111 சம்மன்களும் வெளியிடப்பட்டன.
பினாங்கு துறைமுகத்திலிருந்து வெளியேறும் பாதை மற்றும் BORR-லிருந்து இரு திசைகளிலும் உள்ள அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளையும் மூடிய போலீஸார், பின்னர் அப்பகுதியில் 90 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 132 நபர்களை கைது செய்தனர்.
போலீஸிடமிருந்து தப்பிக்க அவர்கள் ஆக்ரோஷமாகச் செயல்பட்டனர்; எனினும் அவர்களைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டோம் என, செபராங் பிறை உத்தாரா போலீஸ் தலைவர் துணை ஆணையர் Anuar Abd Rahman தெரிவித்தார்.
அனைவரையும் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பின்னர் 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து, 21 வயது ஆடவனை அவர்கள் கைதுச் செய்தனர்.
போலீஸிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் மோட்டார் சைக்கிளோட்டிகள் சாலையின் எதிர்திசையில் புகுந்தோடுவதும், சிலர் மோட்டார் சைக்கிள்களை சாலைத் தடுப்புச் சுவருக்கு மேல் தூக்குவதும் முன்னதாக வைரலான 40 வினாடி வீடியோவில் தெரிந்தது குறிப்பிடத்தக்கது.