வாஷிங்டன், டிசம்பர்-22, உலகின் முக்கியக் கப்பல் போக்குவரத்து தடங்களில் ஒன்றான பனாமா கால்வாயை, அமெரிக்கா மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளுமென, டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிஃபிக் பெருங்கடலையும் இணைத்து தென் அமெரிக்காவைச் சுற்றி செல்லும் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில், பனாமா நாட்டில் செயற்கையாக உருவாக்கப்பட்டது தான் இந்த பனாமா கால்வாய்.
அக்கால்வாயில் 5 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கப்பலின் இரகம், சரக்குகளின் வகைகள், அவற்றின் எடை ஆகியவற்றின் அடிப்படையில் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.
பனாமா நாட்டின் செழிப்புக்கு இந்த சுங்கக் கட்டண வசூலிப்பே முதுகெலும்பாக உள்ளது.
இந்நிலையில், அக்கால்வாயை கடந்துச் செல்லும் அமெரிக்கக் கப்பல்களுக்கு நியாயமற்ற முறையில் அதிக வரி விதிக்கப்படுவாக டிரம்ப் சாடியுள்ளார்.
அதோடு, அப்பகுதியில் சீனாவின் ஆதிக்கமும் தலைத்தூக்கி வருவதானது, அமெரிக்க நலன்களுக்கு மருட்டலாக உருவாகியுள்ளது.
“பனாமா கால்வாயை நிர்வகிக்கும் முழு உரிமை பனாமாவுக்கே உண்டு; சீனாவுக்கோ அல்லது மற்ற நாடுகளுக்கோ அல்ல. அது தவறான கைகளுக்குப் போய் விடாதிருப்பதை அமெரிக்கா உறுதிச் செய்யும்” என டிரம்ப் சொன்னார்.
அதைச் செய்யத் தவறினால், அக்கால்வாயை மறுபேச்சு பேசாமல் பனாமா திருப்பித் தர வேண்டியிருக்குமென டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்ஸ் கைவிட்ட பனாமா கால்வாயின் கட்டுமானத்தை 1914-ல் நிறைவுச் செய்து கொடுத்த அமெரிக்கா, 1977-ல் அதனை பனாமாவிடம் ஒப்படைத்தது.
1999-ல் அக்கால்வாய் பனாமாவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபராக பெறுப்பேற்கிறார்.