
ச்சிக்காகோ, மார்ச்-23 – அமெரிக்காவில் 950 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய ‘pump-and-dump’ எனும் முதலீட்டுத் திட்ட மோசடி தொடர்பில், 5 மலேசியர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கேய்மன் தீவைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துக்காக, குழப்படியான விளம்பரம் மற்றும் பங்கு பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்டிருப்பதாக, ச்சிக்காகோ மாவட்ட நீதிமன்றத்தில் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கினர்.
அத்திட்டத்தில், சீனாவில் உள்ள தனிநபர்கள், தாங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட முதலீட்டு ஆலோசகர்கள் என ஆள்மாறாட்டம் செய்கின்றனர்.
சமூக ஊடகங்கள் மற்றும் அரட்டை தளங்கள் மூலம், அந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் பெரிய இலாபம் கிடைக்குமென பொய் வாக்குறுதியை அளித்து ‘ஏமாளிகளை’ சிக்க வைப்பதே அவர்களின் வேலையாகும்.
அவ்வகையில் பங்கு விலைகளை செயற்கையாக உயர்த்தி, குழும பங்குகளை மொத்தமாக விற்று மில்லியன் கணக்கான டாலர்களை அந்நிறுவனம் இலாபமாக ஈட்டுகிறது.
இதனால் பங்கு விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு, முதலீட்டாளர்கள் தங்கள் முழு முதலீட்டையும் இழக்க நேரிட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.
இதே குற்றத்திற்காக 2 தைவானியர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
அமெரிக்க சட்டத்தின் படி, பத்திர மோசடி குற்றவாளிகளுக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்; அதே நேரத்தில் மின்னியல் சாதனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கம்பி மோசடி குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.