
கோலாலம்பூர், ஜனவரி-14 – சயாம் மரண இரயில் தண்டவாள நிர்மாணிப்பில் பாதிக்கப்பட்ட தமிழர்களை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவிடம் அமைக்கப்பட வேண்டுமென, பேராசிரியர் Dr பி.ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதோடு, மலேசியாவின் வரலாற்று மற்றும் கலாச்சார சுற்றுலாவின் ஒரு பகுதியாக அந்நினைவுச்சின்னத்தை சுற்றுலா அமைச்சு அங்கீகரிக்க வேண்டும்.
அவர்களின் தியாகத்தை கௌரவப்படுத்துவது மட்டுமன்றி வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றில் இந்த துயரமான அத்தியாயத்தை நினைவு படுத்த அது அவசியமாகும் என்றார் அவர்.
இந்த இந்தியத் – தமிழ் தொழிலாளர்களை கௌரவிக்க மலேசியாவில் ஒரு நினைவுச்சின்னம் கூட இல்லாதது அப்பட்டமான புறக்கணிப்பாகும்.
இதனால் தான், பினாங்கின் துணை முதலமைச்சராக இருந்த போது, பிறையில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்க தாம் முன்மொழிந்தாகவும், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்திலிருந்து வெளியேறியதும் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் ராமசாமி கூறினார்.
எனவே, மடானி அரசாங்கம், இந்த வரலாற்றுத் தியாக ஆவண அடையாளத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, உரிமைக் கட்சியின் தலைவருமான அவர் சொன்னார்.
தெற்கு தாய்லாந்தில் உள்ள காஞ்சனபுரி அருங்காட்சியகம் இவ்வாண்டு இறுதிக்குள் நிரந்தரமாக மூடப்படுவிருப்பதால், சயாம் மரண ரயில்வே கட்டுமானத்தின் போது இறந்த 106 தமிழ் தொழிலாளர்களின் எச்சங்கள் முற்றிலும் தகனம் செய்யப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்களின் வரலாறு அங்கீகாரம் இல்லாமல் மறையும் அபாயம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் Dr ராமசாமி அவ்வாறு கூறினார்.