‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’; வெளிநாடுகளுக்கான நன்கொடையிலும் ‘கை வைத்த’ டோனல்ட் டிரம்ப்
வாஷிங்டன், ஜனவரி-25, உலகின் மிகப்பெரிய நன்கொடையாளரான அமெரிக்கா, அவசர உணவுத் தேவை மற்றும் இஸ்ரேல்-எகிப்துக்கான இராணுவ நிதியுதவிகள் தவிர்த்து, கிட்டத்தட்ட அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் முடக்கியுள்ளது.
வெளிநாடுகளுக்கான நன்கொடைகளைக் கட்டுப்படுத்தும் ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற முழக்கத்தோடு டோனல்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவ்வுத்தரவு வெளியாகியுள்ளது.
நடப்பிலுள்ள நிதியுதவிகளை நீட்டிப்பது மீதான மறு ஆய்வுகள் முடியும் வரை, புதிய நன்கொடைகள் எதுவும் பரிசீலிக்கப்படாது என, வெள்ளை மாளிகைக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது.
அவ்வகையில், அடுத்த 85 நாட்களுக்குள் அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் உள் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த அதிரடி உத்தரவானது, மேம்பாட்டு உதவிகள் முதல் இராணுவ உதவிகள் வரை அனைத்தையும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதிகம் பாதிக்கப்படப் போவது என்னமோ யுக்ரேய்னாகத்தான் இருக்கும்.
ரஷ்யாவின் படையெடுப்பைச் சமாளிக்க, முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சியின் கீழ் பில்லியன் டாலர் கணக்கில் யுக்ரேய்னுக்கு ஆயுத உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும் நெருங்கிய ‘பங்காளிகளான’ இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் வழங்கி வரும் இராணுவ உதவிகளில் மட்டும் டிரம்ப் கை வைக்கவில்லை.
அவற்றுக்கான ‘தாராள’ நன்கொடைகள் தொடருமென வெள்ளை மாளிகைக் கூறியது.