வாஷிங்டன், டிசம்பர்-1,பிரிக்ஸ் (BRICKS) அமைப்பைச் சேர்ந்த நாடுகள், புதிய நாணயத்தை உருவாக்கவோ அல்லது அமெரிக்க டாலருக்கு மாற்றாக இன்னொரு நாணயத்தை ஆதரிக்கவோ கூடாது.
மீறினால் 100 விழுக்காடு வரி விதிப்பை அவை எதிர்நோக்க நேரிடுமென, அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அதோடு, ‘அற்புதமான’ அமெரிக்க பொருளாதாரத்துடனான வர்த்தக உறவுக்கு அவை விடைகொடுக்க வேண்டியது தான் என, தனது சமூக ஊடகத் தளமான Truth Social-லில் டிரம்ப் எழுதியுள்ளார்.
அனைத்துலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை மிஞ்சும் நாணயம் வேறொன்றுமில்லை;
எனவே, அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்ற கடப்பாட்டை அறிவிப்பதே, பிரிக்ஸ் நாடுகளுக்கு பாதுகாப்பு என டிரம்ப் எச்சரித்தார்.
கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்ச நிலை மாநாட்டின் போது, உறுப்பு நாடுகள் பொதுவானதொரு புதிய நாணயத்தை உருவாக்கும் சாத்தியம் குறித்து ஆராய ஒப்புக் கொண்டிருந்தன.
ரஷ்யாவும் சீனாவும் அதில் அதிக ஈடுபாடு காட்டுவதாகவும், ஆனால் மற்றொரு முக்கிய உறுப்பு நாடான இந்தியா அதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் முன்னதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.