
நியூ யோர்க், ஜனவரி-6 – பதவி வீழ்த்தப்பட்ட வெனிசுவலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ, அமெரிக்கா, நியூ யோர்க்கில் உள்ள மன்ஹாட்டன் கூட்டரசு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார்.
சிறை உடை அணிந்து வந்த அவர், மனைவி சிலியா ஃபுளோரஸுடன் (Cilia Florez) நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எனினும் அவற்றை முற்றாக மறுத்து, ‘தான் ஒரு போர்க் கைதி’ என மடுரோ நீதிமன்றத்தில் கர்ஜித்தார்.
சிலியாவும் குற்றச்சாட்டை மறுத்தார்.
அமெரிக்க சிறப்பு கமாண்டோ படைகளால் சொந்த நாட்டிலேயே கைதுச் செய்யப்பட்ட மடுரோ, தமக்கெதிரான அமெரிக்க நீதிமன்ற விசாரணையை சட்டவிரோதம் எனக் கூறினார்.
இது ஒரு அப்பட்டமான கடத்தல் என மடுரோவின் வழக்கறிஞர் வாதிட்ட போதும், நீதிபதி வழக்கைத் தொடர உத்தரவிட்டார்.
அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீண்ட காலம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வழக்கு, வாஷிங்டன்–கராகஸ் உறவுகளை மேலும் பதற்றப்படுத்தி, அனைத்துலகச் சட்டம் மற்றும் சுதந்திர நாட்டின் இறையாண்மையை சோதிக்கும் முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது.



