
கோலாலம்பூர், ஜனவரி-19-அம்னோ -அம்னோ – ம.இ.கா இடையிலான மனஸ்தாபம் நீங்கி, உறவு மீண்டும் மலர்ந்திருப்பதாக தேசிய முன்னணித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
கடந்த வார அம்னோ பொதுப் பேரவையின் தொடக்க விழாவில் ம.இ.கா சார்பில் அதன் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கலந்துகொண்டார்.
தேசிய முன்னணி நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நேற்றைய சிறப்புகுக் கூட்டத்தில் கூட ம.இ.கா தலைவர்கள் பங்கேற்றனர்.
இதுவே, பிணக்குத் தீர்ந்து உறவு மலர்ந்திருப்பதற்கான அடையாளம் என, துணைப் பிரதமருமான சாஹிட் கூறிக் கொண்டார்.
ஆக, இத்தனை நாட்களாக ‘கோப்பைக்குள் வீசியப் புயல் ஓய்ந்து விட்டதாக’ அவர் உவமையாகக் கூறினார்.
இதையடுத்து, அரசியல் நிலைத்தன்மைக்காகவும் நாட்டின் நிர்வாகம் சுமூகமாக நடைபெறவும் ஏதுவாக, கூட்டணிக் கட்சிகளிடையிலான உறவு தொடர்ந்து வலுப்படுத்தப்படுமென அவர் சொன்னார்.
அம்னோ பொதுப்பேரவையைத் தொடக்கி வைத்த உரையாற்றிய போது, ம.இ.கா, ம.சீ.ச ஆகிய தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் மனக்கசப்புகளை மறந்து மீண்டும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என சாஹிட் கூறியிருந்தது தெரிந்ததே.
“சகோதார சண்டையில் நீண்ட நாட்களுக்கு முகத்தைத் திருப்பி வைத்துகொள்ள முடியாது; சதா சமாதானமும் செய்துகொண்டிருக்க முடியாது” என்றார் அவர்.
எனினும் சஹிட்-டின் இக்கூற்றை ம.இ.கா ஏற்றுக் கொண்டுள்ளதா எனும் கேள்வி உள்ளது.
எது எப்படி இருப்பினும், தனது எதிர்காலம் குறித்து தைப்பூசத்துக்குப் பிறகு ம.இ.கா மத்திய செயலவை எடுக்கப் போகும் இறுதி முடிவே அனைத்திற்கும் பதில் சொல்லும்



