Latestமலேசியா

கோம்பாக் செத்தியா குடியிருப்பில் காணப்படும் ‘விரிசல்கள்’ உண்மையில் விரிவாக்க இணைப்புகள்; DBKL விளக்கம்

கோம்பாக், மே-30 – சிலாங்கூர், கோம்பாக் செத்தியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் காணப்படும் ‘விரிசல்கள்’ உண்மையில் விரிவாக்க இணைப்புகளாகும் (expansion joints).

வெப்பநிலை மற்றும் வானிலை மாற்றங்களால் இயற்கையாக ஏற்படும் கட்டட அசைவுகளை தாங்கிக் கொள்வதற்காக அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள 43-ஆவது புளோக் கட்டடத்தில் விரிசல்கள் இருப்பது போல் காட்டும் ஒரு வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

கட்டடத்தின் பிரதான கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்படுவதைத் தடுப்பதே இந்த விரிவாக்க இணைப்பின் முக்கியப் பணியாகும்.

எனவே, கட்டடத்தின் ஒட்டுமொத்த நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிச் செய்வதில் அதன் இருப்பு மிக முக்கியமானது என DBKL அறிக்கையொன்றில் கூறியது.

இருப்பினும், இந்த ஆய்வில் விரிவாக்க இணைப்புகளில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது; இது நாசவேலைகளால் ஏற்பட்டதாக நம்பப்படுவதாக DBKL கூறிற்று.

கட்டிடத்தின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கான நடவடிக்கைகளை DBKL ஏற்கனவே எடுத்திருந்தது; விரிவாக்க இணைப்புகளில் மதிப்பீட்டு ஆய்வை நடத்த 2020-ஆம் ஆண்டில் ஓர் ஆலோசனை நிறுவனத்தை நியமித்ததும் அதிலடங்கும்

பிறகு 2023-ல் புளோக் 41, 43 கட்டடங்களில் முழு பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன;
கடந்தாண்டும் அது தொடரப்பட்டதை DBKL சுட்டிக் காட்டியது.

மே 26-ஆம் தேதியன்று, அங்குள்ள குடியிருப்பாளர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் சுவர்களுக்கு இடையில் உருவாகும் இடைவெளிகளை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

கடந்தாண்டு இந்த இடைவெளிகள் தெளிவாகத் தெரிந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!