
புத்ரா ஜெயா , மார்ச் 24 – மலாய் மொழி சரளமாகத் தெரியாததால் ஆசிரியர் ஒருவர் தனது மாணவரை சீனாவுக்கு செல்லும்படி கூறியதாக கூறப்படும் வைரலான விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கல்வி அமைச்சின் உட்கட்ட விசாரணை உட்பட இந்த விவகாரம் போலீசினால் விசாரிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் ( Fadlina Sidek ) கூறினார்.
பள்ளிகளில் ஏற்படும் இனவெறி பிரச்னையில், ஆசிரியர்கள், மாணவர்கள் அல்லது அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சு சமரசம் செய்து கொள்ளாது என்பதை தாம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில், விசாரணை ஏற்கனவே நடந்து வருகிறது, விசாரணையின் முடிவின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.
புத்ராஜெயாவைச் சுற்றியுள்ள 320 தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இன்று வர்த்தக தொகுதியில் உதவிகளை வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, மலாய் மொழி புரியாததால், உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரை சீனாவுக்குத் திரும்பிச் செல்லும்படி சொன்னதாக ஆசிரியர் ஒருவர் ஒப்புக்கொண்ட ஆடியோ கிளிப் ஒன்று வைரலாகியது.
அந்த மாணவரின் சகோதரர் வாக்குமூலம் அளிக்குமாறு ஆசிரியரிடம் கூறியதை அடுத்து அந்த வீடியோ வைரலாக பரவியது.