
ஜோகூர் பாரு, ஜூலை-25- சுல்தான் இஸ்மாயில் நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு வழங்கும் மூல நீரில் அதிகப்படியான அம்மோனியா இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, ஜோகூர் பாரு மற்றும் ஸ்கூடாயில் சுமார் 40,000 பயனீட்டாளர்கள் புதன்கிழமையிலிருந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்பாளர்களுக்கான சுத்தமான நீர் விநியோகத்தை நேரடியாகப் பாதிக்கும் அளவுக்கு, இது ஒரு கடுமையான மாசுபாடு என, ஜோகூர் நீர் விநியோக நிறுவனமான Ranhill SAJ தெரிவித்தது.
அதிக செறிவுள்ள அம்மோனியா இரசாயனமானது ஆற்று நீரை மாசுபடுத்தி, அதனைப் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பற்றதாக மாற்றி விடும்.
இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், பொது மக்களுக்கும் ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்துமென, அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அனுவார் அப்துல் கானி (Anuar Abdul Ghani) தெரிவித்தார்.
எனினும், உடனடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000 பேரிலிருந்து தற்போது 1,000 பேராகக் குறைந்திருக்கிறது.
என்றாலும், அப்பகுதியின் தண்ணீரின் தரம் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அம்மோனியா மாசுபாடு எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்து, உடனடி தடுத்து நடவடிக்கைகளை எடுக்க அது அவசியமென்றார் அவர்.