
சென்னை, ஜனவரி-14-அயலகத் தமிழர் தினமான ஜனவரி 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில், பினாங்கு மாநில அரசின் சார்பில் அதன் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜு கௌரவிக்கப்பட்டார்.
‘தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்’எனும் கருப்பொருளில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்ட அந்நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுந்தராஜுவுக்கு நினைவுப் பரிசினை எடுத்து வழங்கினார்.
இந்த அங்கீகாரம், உலகத் தமிழ் பரவலின் வலிமையையும் அதன் பங்களிப்பையும் வெளிப்படுத்துவதாக சுந்தராஜு வருணித்தார்.
அயலகத் தமிழர் தினம், கல்வி, பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய தளமாக உள்ளது.
இந்நிலையில், பினாங்கு, தென்கிழக்காசியாவில் தமிழ் பாரம்பரியத்தின் ஒளிவிளக்காக நீண்ட காலமாக திகழ்கிறது.
இது, பினாங்கு மாநில அரசு மற்றும் தமிழக அரசுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துகிறது என்றார் அவர்.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில், பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்களான குமரேசன் ஆறுமுகம், குமரன் கிருஷ்ணன் உள்ளிடோரும் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசின் அன்பான வரவேற்புக்கும் அங்கீகாரத்திற்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்ட சுந்தராஜு, இப்பெருமை, தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்கும் மற்றும் உலகத் தமிழ் சமூகத்தை ஒன்றிணைக்கவும் முயற்சிகளை மேலும் ஊக்குவிப்பதாகக் கூறினார்.



