
கோலாலம்பூர், மார்ச்-9 – நாட்டில் சமையல் எண்ணெய் பாட்டில்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைப் பிரச்னையைத் தீர்க்க, வரும் வாரத்தில் ஒப்பந்தம் இறுதிச் செய்யப்படும்.
அரசாங்கத்துக்கும் சமையல் எண்ணெய் விநியோகிப்பாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் அலி தெரிவித்தார்.
இந்த 3 மாதங்களில் இரமலான் நோன்பு, ஹரி ராயா பெருநாள், காஅமத்தான் மற்றும் காவாய் என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன.
எனவே, விழாக் கால தேவைகளுக்கு சமையல் எண்ணெய் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதை உறுதிச் செய்ய, அரசாங்கத்தின் தலையீடு அவசியமென்றார் அவர்.
இது ஒரு தற்காலிக உடனடி தீர்வு; நீண்ட கால அடிப்படையிலும் இப்பிரச்னைக்குத் தீர்வுக் காண அமைச்சு மும்முரம் காட்டி வருகிறது.
அரசாங்கத்தின் தலையீட்டின் பலனாக, சமையல் எண்ணெய் நிறுவனங்களில் உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
விநியோகிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகைகளுக்கான நிதியை வழங்குவது குறித்து ஆராய அரசாங்கம் முடிவு செய்திருப்பதும் அதற்கு காரணமாகும் என்றார் அவர்.
கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், பாட்டில் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள், செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக உற்பத்தியைக் குறைத்துள்ளனர்.
சில தொழிற்சாலைகள் 50 விழுக்காடு வரை உற்பத்தியைக் குறைத்திருப்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.