
கோலாலம்பூர், ஜூலை-19- 5-ஆண்டு தவணை முடியும் வரை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக நீடிக்க வேண்டும்.
நிச்சயமற்ற பொருளாதாரச் சூழலில் அரசியல் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய அது அவசியமென, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி கூறியுள்ளார்.
பாதியிலேயே அரசாங்கத்தை மாற்றினால், அதிகரித்து வரும் பொருளாதாரச் சவால்களைச் சமாளிப்பது கடினமாகலாம்.
குறிப்பாக ஆசியான் வட்டாரப் பொருளாதார வளர்ச்சியும் மந்தமாகும் என கணிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், அரசாங்கத்தை மாற்றக் கூடாது என ரஃபிசி சொன்னார்.
மலேசியப் பொருளாதாரமும் 3 விழுக்காடு அல்லது அதற்கும் கீழ் சரிவுகண்டால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நாட்டுக்கு அது பெரும் சிக்கலைக் கொண்டு வரும்.
எனவே இதனைச் சமாளிக்க நிலைத்தன்மைமிக்க அரசாங்கம் வேண்டும்.
Yang Berhenti Menteri எனும் podcast பேட்டியில், அந்த முன்னாள் பொருளாதார அமைச்சர் அவ்வாறு பேசினார்.
அன்வாரை பிரதமர் பதவியிலிருந்து விலக வற்புறுத்தக் கோரி, வரும் ஜூலை 26-ஆம் தேதி மாபெரும் பேரணிக்கு எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அதில் 50,000 பேர் பங்கேற்பார்கள் என தொடக்கத்தில் கணிக்கப்பட்டாலும், இப்போது அவெண்ணிக்கை 300,000 பேரை எட்டுமென ‘Turun Anwar’ பேரணி ஏற்பாட்டுக் குழு கூறி வருகிறது.
இவ்வேளையில், மக்களவை வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடும் போது அன்வாரை விமர்சனம் செய்யவோ அல்லது அவமானப்படுத்தவோ தாம் விரும்பவில்லை என ரஃபிசி தெளிவுப்படுத்தினார்.
அமைச்சரவையிலிருந்து விலகியப் பிறகு, அரசாங்கத்தின் செயல்படுகள் குறித்து வெளிப்படையாகவே அந்த பி.கே.ஆர் எம்.பி விமர்சித்து வருகிறார்.
இதனால் ரஃபிசியையும் அவருடன் இருப்பவர்களையும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டுமென, ஜோகூரில் 19 பி.கே.ஆர் தொகுதிகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.