
கோலாலம்பூர், மார்ச்-29- அரசாங்க நிகழ்வுகள், வளாகங்கள், படிப்புகள் மற்றும் பிரச்சாரங்களின் பெயர்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்காக அரசு ஊழியர்களைக் கண்டித்த DBP எனப்படும் Dewan Bahasa Dan Pustaka-வின் செயலை, முன்னாள் மூத்த அரசு அதிகாரி ஒருவர் விமர்சித்துள்ளார்.
DBP தலைமை இயக்குநர் ஜெனரல் ஹசாமி ஜஹாரியின் அறிக்கை “அபத்தமானது” என தான் ஸ்ரீ Dr ரேமன் நவரத்னம் சாடினார்.
இந்த விஷயத்தில் “இன்னும் சமநிலையான, நியாயமான மற்றும் பகுத்தறிவு அணுகுமுறை” தேவை என போக்குவரத்து அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளருமான அவர் கூறினார்.
“தேசிய மொழியான மலாய் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டால், அதை ஏன் என்று கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உண்டு; ஆனால் அரசு அலுவல்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் அனைவரையும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பவர்கள் என பொத்தாம் பொதுவாக முத்திரை குத்துவது மோசமானது.”
“இது ஒரு சிக்கலான மற்றும் உணர்ச்சிபூர்வமான விஷயம்; ஓரடி தவறினாலும், குழப்பத்தையும் தவறான புரிதலையும் ஏற்படுத்தும் என்பதால், அரசாங்கம் இந்த விஷயத்தை அமைச்சரவை மட்டத்தில் விவாதிக்க வேண்டும்,” என அவர் FMT-யிடம் கூறினார்.
அனைத்து அலுவல்களும் கட்டாயம் மலாய் மொழியில் தான் நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு இருந்திருந்தால், தாம் கூட சிரமத்தை எதிர்நோக்கியிருக்கக் கூடுமென நிதி அமைச்சில் துணைத் தலைமைச் செயலாளராகவும் பதவி வகித்தவரான நவரத்தினம் கூறினார்.
“வெளிநாட்டு தூதரகத்திலிருந்து உங்களுக்கு ஒரு கடிதம் வந்தால், நீங்கள் மலாய் மொழியில் பதிலளிக்க மாட்டீர்கள் – அது மற்ற நாட்டிற்கு அவமரியாதையாகி விடும்” என்று அவர் சுட்டிக் காட்டினார்.
முன்னாள் இரும்புப் பெண்மணி தான் ஸ்ரீ ரஃபிடா அசிஸும் அக்கருத்தை ஆமோதித்தார்.
தகவல்தொடர்பை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்துவதிலும், பரந்த அறிவுக் களஞ்சியத்தை அணுகுவதிலும் ஆங்கிலத்திற்கு இருக்கும் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, பல நாடுகள் இப்போது அதற்கு முன்னுரிமை அளிக்கின்றன.
ஆனால் இங்கே நீங்கள் ஏன் பின்னோக்கிச் செல்கிறீர்கள் என முன்னாள் அமைச்சருமான அவர் கேட்டார்