
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8- முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் ஊழல் வழக்கில் அரசு தரப்பின் முக்கிய சாட்சியான ஓர் ஆடவரை, 10 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கியச் சம்பவத்துக்கும், அவ்வழக்கிற்கும் தொடர்பேதும் இல்லை.
மாறாக, அது ஒரு தெளிவான கொள்ளை முயற்சி என, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஷாருல் நிசாம் ஜாஃபார் (Sharul Nizam Jaa’far)) தெரிவித்தார்.
எனவே, இது சாட்சிகளைக் கலைக்கும் சம்பவம் அல்ல என்றார் அவர். கொள்ளையர்கள், அவ்வாடவரின் வீட்டிலிருந்து விலைமதிக்கத்தக்கப் பொருட்களுடன் அருகிலுள்ள காட்டுப் பகுதி வழியாக தப்பிச் சென்றனர்.
அந்த காட்டில் சென்று தேடியதில், கொள்ளையிட்டப்பட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டன. எனவே அதனை கொள்ளை முயற்சியாக வகைப்படுத்தி விசாரணை நடைபெற்று வருகிறது; சந்தேக நபர்களைத் தீவிரமாக தேடி வருகிறோம் என ஷாருல் நிசாம் சொன்னார்.
இன்று காலை பெட்டாலிங் ஜெயா அருகேயுள்ள புகார்தாரரின் வீட்டுக்குச் சென்ற மர்ம நபர்கள், 2 பாதுகாவலர்களைக் கட்டிப் போட்டு விட்டு வீட்டுக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அதில் முகத்திலும் கைகளிலும் அந்நபர் காயங்களுக்கு ஆளானார்.
சாட்சியை தாக்கி விட்டு, “ஹீரோவாக முயற்சிக்க வேண்டாம், வீட்டிலேயே இரு” என அந்த சாட்சியை அக்கும்பல் மிரட்டி விட்டும் சென்றதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.