Latestமலேசியா

அரிசியை விட சிறியது; உலகின் மிகச் சிறிய இதயமுடுக்கி; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

இலினோய், ஏப்ரல்-4- மருத்துவ விஞ்ஞானிகளின் அசர வைக்கும் புதியக் கண்டுபிடிப்பாக, உலகின் மிகச் சிறிய இதயமுடுக்கி அதாவது pacemaker உருவாகியுள்ளது.

ஒரு அரிசி தானியத்தின் அளவில் மட்டுமே இருக்கும் இந்த pacemaker சாதனம், அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழக ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ அறிவியல் உலகில் ஒரு பெரிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

காரணம், இது நடப்பில் பயன்பாட்டில் உள்ளதைப் போல் அல்லாமல், அதன் பணியை முடித்தவுடனேயே கரைந்துவிடும்.

இந்த தற்காலிக இதயமுடுக்கிகள், குழந்தை அறுவை சிகிச்சைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஒரு நோயாளி இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் போது, தற்காலிகமாக இதயத்தை வேகப்படுத்த வேண்டிய அவசியம் அடிக்கடி ஏற்படுகிறது.

மீட்சியின் போது பாதுகாப்பான இதயத் துடிப்பைப் பராமரிக்க இது அவசியமாகும்.  ஆனால், பாரம்பரிய தற்காலிக இதயமுடுக்கிகள் பருமனான கம்பிகள் மற்றும் வெளிப்புற சாதனங்களைப் பயன்படுத்துகின்றன; அவை பெரும்பாலும் சிக்கலானதாகவும் சங்கடமாகவும் விளங்குகின்றன.

அதை விட பெரியக் கவலை என்னவென்றால், இதயமுடுக்கி கம்பிகளை அகற்றும் போது ஏற்படக்கூடிய சிக்கல்கள். குறிப்பாக வடு திசு (scar tissue ) உருவாகி, உட்புற இரத்தப் போக்கு உள்ளிட்ட மோசமான விளைவுகள் ஏற்படலாம்.

இந்த அபாயங்களைக் கருத்தில் கொண்டே, நிர்ணயிக்கப்பட்ட பணி முடிந்ததும் நோயாளியின் உடலிலேயே கரைந்துவிடும் வகையில் இந்த ‘அரிசி’ pacemaker சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், வலியோடு நோயாளி உடலிலிருந்து பிரித்தெடுக்கும் செயல்முறையைத் தவிர்க்கலாம்; ஆரோக்கியமான இதய திசுக்கள் கிழிந்துபோவது உள்ளிட்ட சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்கலாம்.

எல்லாம் சுமூகமாக நடந்தால், இன்னும் 5 ஆண்டுகளில் மருத்துவ பரிசோதனைகளில் இந்த சாதனம் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!