கோலாலம்பூர், செப்டம்பர் -26 – அறுவை சிகிச்சையால் வலது கை செயலிழந்துபோன பெண்ணுக்கு 11 லட்சம் ரிங்கிடை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோலாலம்பூர் Gleneagles மருத்துவமனையும், அறுவை சிகிச்சையை நடத்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், நடந்த மருத்துவ அலட்சியத்துக்கு பொறுப்பேற்றே ஆக வேண்டுமென கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்ட Nurul Iman Abu Mansor என்ற அப்பெண்ணுக்கு, செலவுத்தொகையாக 150,000 ரிங்கிட்டை வழங்குமாறும் அவ்விரு தரப்புகளை நீதிபதி உத்தரவிட்டார்.
Carpal tunnel syndrome என்றழைக்கப்படும் கைவிரல்கள் மறத்துப் போவது தொடர்பான நரம்பியல் கோளாறை சரி செய்வதற்காக, 2018-ஆம் ஆண்டில் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அறுவை சிகிச்சையின் போது அவரின் இடைநிலை நரம்பு அலட்சியமாக வெட்டப்பட்டள்ளது;
அதோடு வெட்டுக் காயத்தைக் கண்டறிந்து சரியான சிகிச்சை அளிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
அறுவை சிகிச்சையின் போது ஏற்படக்கூடிய சிக்கல்கள் அல்லது ஆபத்துகள் பற்றி ஒப்புதல் படிவத்தில் குறிப்பிடப்படவில்லை அல்லது எந்த மருத்துவ பதிவேடுகளிலும் பதிவு செய்யப்படவில்லை என்ற வாதத்தையும் அப்பெண்ணின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நிரூபித்தனர்.
17 வயதில் அறுவை சிகிச்சையில் நடந்த கவனக்குறைவால் அப்பெண் தனக்கு மிகவும் வாட்டமான வலது கையைப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.