
அலாஸ்கா, ஆகஸ்ட்-16 – இருபெரும் உலகத் தலைவர்களான அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
அலாஸ்காவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் அந்த 3-மணி நேர உச்சநிலை சந்திப்பு நடைபெற்றது.
அச்சந்திப்பு “மிகவும் பயனுள்ள” மற்றும் “பரஸ்பர மரியாதை மிக்க”தாக இருந்ததாக, பின்னர் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இருவரும் கூறிக் கொண்டனர்.
ஆனால் யுக்ரேய்ன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எந்த இறுதி உடன்பாட்டும் எட்டப்படவில்லை.
அது குறித்து பேசிய ட்ரம்ப், “ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஒப்பந்தம் எதுவும் இல்லை” அதாவது ரஷ்யா இறங்கி வர வேண்டும் என்பதை சூசகமாக வலியுறுத்தினார்.
புட்டினோ, ரஷ்யா உண்மையிலேயே சமாதானத்தை விரும்புகிறது, ஆனால் மோஸ்கோவுக்கு “நியாயமான கவலைகள்” உள்ளன என்றார்.
முக்கிய அம்சங்களில் சில ஒத்துப்போனாலும், சில தீர்க்கப்படாத விஷயங்கள் இன்னும் இருக்கின்றன என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
எது எப்படி இருப்பினும் இச்சந்திப்பு சமாதானத்திற்கு வழிவகுக்கும் என இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
என்றாலும் யுக்ரேய்ன் விவகாரத்திற்கு ஒரு தீர்க்கமான தீர்வு எட்டப்படாமலேயே இச்சந்திப்பு நிறைவுப் பெற்றது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், மோதல் போக்கிலிருந்த இரு தலைவர்களும் அதனை ஒதுக்கி வைத்து விட்டு நேரில் சந்தித்து பேசியிருப்பதே ஒரு பெரிய முன்னேற்றம் தான் என்பதையும் மறுக்க முடியாது.