
அலோர் ஸ்டார், மார்ச்-3 – கெடா, அலோர் ஸ்டார், ஜாலான் தோக் கெலிங்கில் உள்ள வீட்டொன்றில் 68 வயது மூதாட்டி தீப்புண் காயங்களுடன் இறந்துகிடந்தார்.
திடீரென வெறித்தனமாக நடந்துகொண்ட சொந்த மகனே தாயை தீ வைத்துக் கொளுத்தியதாக நம்பப்படுகிறது.
நேற்று காலை 7 மணிக்கு 43 வயது சந்தேக நபருக்கும் அவரது தாய்க்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
திடீரென பாட்டி உதவிக் கோரி கூச்சலிடவே, பதறிப் போன 14 வயது பேரன் வெளியே ஓடி அண்டை வீட்டுக் காரர்களிடம் உதவிக் கேட்டுள்ளான்.
அக்கம் பக்கத்தார் ஓடி வந்து பார்த்த போது, சந்தேக நபர் வெறித்தனமாக மிரட்டியதால் அவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸ் வந்தவுடன் வீட்டின் முன்புறத்தில் அவ்வாடவர் கைதுச் செய்யப்பட்டார்.
விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான மாற்றுத்திறனாளி அட்டையை வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
மூதாட்டியின் சடலம் சவப்பரிசோதனைக்காக சுல்தானா பாஹியா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
கொலைக்கான காரணமும் விசாரிக்கப்பட்டு வருவதாக கோத்தா ஸ்டார் போலீஸ் கூறியது.