புத்ராஜெயா, அக்டோபர்-10, மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபூ (Altantuya Shaariibuu) கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹாட்ரி (Azilah Hadri), மரண தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.
அவரின் மரண தண்டனையை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று ஆயுட்கால தண்டனையாக மாற்றியது.
இதையடுத்து அவருக்கு 40 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படிகளை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
2023 மரண தண்டனை சீராய்வு மற்றும் வாழ்நாள் சிறை சட்டத்தின் கீழ், தனது மரண தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரி, 48 வயது அசிலா மனு செய்திருந்தார்.
அல்தான்துயாவின் தந்தை Dr Shaariibuu Setev-வும், அசிலாவின் விண்ணப்பத்தை ‘வாழ்வின் மகத்துவம்’ அடிப்படையில் ஆதரித்தது இங்கு கவனிக்கத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூலை 4-ங்காம் தேதி அமுலுக்கு வந்த கட்டாய மரண தண்டனையை இரத்துச் செய்யும் சட்டத்தின் கீழ், மரண தண்டனையைக் குறைக்கவோ அல்லது நிலை நிறுத்தவோ நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மரண தண்டனையை அகற்ற நீதிபதி முடிவு செய்வாரேயானால், அதற்கு பதிலாக 30-திலிருந்து 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையை விதிக்க முடியும்.