
கோலாலம்பூர், ஜூலை 29 – பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் அறிவித்த 100 ரிங்கிட் அடிப்படை ரஹ்மா நன்கொடை (SARA) திட்டத்தின் மூலம் ஆகஸ்டு 31ஆம் தேதி முதல் மக்கள் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
ஒரு முறைக்கான இந்த உதவித் தொகை தானாகவே பெறுநரின் MyKad இல் வரவு வைக்கப்படும், இதனால் அவர்கள் 90,000 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்களை ரொக்கமின்றி வாங்க முடியும்.
22 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த உதவிக்காக 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் முறையாக வருமான நிலை அல்லது குடும்ப வருமானத்தின் வகையைப் பொருட்படுத்தாமல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த உதவி வழங்கப்படுகிறது.
மைடின், லோட்டஸ், எக்கோன் சேவ் மற்றும் 99 ஸ்பீட்மார்ட் போன்ற முக்கிய பல்பொருள் விற்பனை மையங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் உட்பட 4,100 க்கும் மேற்பட்ட கடைகளில் டிசம்பர் 31 வரை அடிப்படை பொருட்களை வாங்கலாம்.