
கோலாலம்பூர், பிப்ரவரி-15 – ஆசியான் வட்டாரம் அதன் ‘வீரியத்தை’ இழந்து விட்டதாகவும் சரிவை நோக்கிப் பயணிப்பதாகவும் மேற்கத்திய ஆய்வாளர்கள் அண்மையக் காலமாக கூறி வருகின்றனர்.
சீனாவின் உற்பத்தி மேலாதிக்கம், உலகளாவிய விநியோகச் சங்கிலி மறுசீரமைப்பு மற்றும் அமெரிக்காவின் உயரிய வட்டி விகிதங்கள் ஆசியானின் போட்டித்தன்மையை அரித்துவிட்டதாக, அவர்கள் வாதங்களை அடுக்குகின்றனர்.
ஆனால், இது முழுக்க-முழுக்க ஆசியானைக் குறைத்து மதிப்பிடும் செயலாகுமென்பதே, உள்ளூர் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
உண்மையில், ஆசியான் அதன் ‘கர்ஜனையை’ இழக்கவில்லை; மாறாக, மலேசியாவின் தலைமையில் உலகப் பொருளாதாரத்தில் ஆசியான் தனது போக்கைச் சரிசெய்துக் கொண்டிருக்கிறது.
சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல் உலகப் பொருளாதாரத்தில், ஆசியான் ஒன்றும் செயலற்ற பார்வையாளர் கிடையாது;
காரணம், Apple, Samsung போன்ற உலகப் பெருநிறுனவங்களின் படையெடுப்பு, மோட்டார் வாகன உற்பத்தி, மின்சார வாகனங்கள், மின்னியல் பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றில் முன்னணி வகிப்பது என ஆசியானின் விநியோகச் சங்கிலியின் பரிணாம வளர்ச்சி மலைக்க வைக்கிறது.
சீனாவால் ஆசியானுக்கு அழுத்தம் வருவதில்லை; ஆசியானை நம்பியே சீனா என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது
என Phar Kim Beng மற்றும் CW Sim தங்களது கட்டுரையில் கூறியிருக்கின்றனர்.
2023-ல் மட்டுமே, இந்தியா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க வட்டாரங்களைப் பின்னுக்குத் தள்ளி 150 பில்லியன் டாலரை, நேரடி அந்நிய முதலீடாக ஆசியான் ஈர்த்துள்ளது.
ஆக இந்த 2025-ல் ஆசியான் தலைவராக, மலேசியா ஆசியானின் கூட்டுப் பொருளாதார மறுமலர்ச்சிக்கு தலைமை தாங்குவது மட்டுமல்லாமல், அதன் உந்து சக்தியாக அதன் நிலையைப் பாதுகாக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்று வியூகத் திட்டங்கள் மூலம் ஆசியானின் கனவை நிறைவேற்ற முடியும்.
ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உலக முதலீட்டின் முக்கிய மையமாக்குவது, மத்தியக் கிழக்கு நாடுகளின் எரிசக்தி முதலீட்டை அதிகரிப்பது, உலகலாய சிப் தொழில்துறையில் ஆசயானின் இடத்தை வலுப்படுத்துவது ஆகியவையே அம்மூன்று அம்சங்களாகும்.
மலேசியா, ஆசியானின் பொருளாதாரத் தலைவராக இருக்க வேண்டும்; பின்தொடர்பவராக அல்ல.
இது தேசிய நலன்கள் மட்டுமல்ல; 2026/2027 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அன்வாரின் நிர்வாகம் எவ்வாறு பொருளாதாரத் தலைமையை நிரூபிக்க முடியும் என்பது பற்றியது.
ஆக இந்த 2025-ஆம் ஆண்டு ஆசியானை உலகமே உற்றுநோக்கும்; ஆசியானின் திசை மலேசியாவின் தலைமைத்துவத்தால் தீர்மானிக்கப்படும் என்பது மட்டும் உறுதி.