
வாஷிங்டன், ஜனவரி 13 – உலகப் புகழ்பெற்ற பொம்மை தயாரிப்பு நிறுவனமான Mattel, ஆட்டிசம் கொண்ட குழந்தைகளை பிரதிபலிக்கும் முதல் பார்பி பொம்மையை அறிமுகம் செய்துள்ளது.
அனைத்து குழந்தைகளும் தங்களைப் பிரதிபலிக்கும் பொருளாகதான் ஒரு பொம்மையைக் காண்கின்றார்கள். அந்த நோக்கில்தான் இந்த புதிய பார்பி பொம்பை வடிவமைக்கப்பட்டுள்ளதாக Mattel தெரிவித்துள்ளது. இந்த பொம்மை Autistic Self Advocacy Network (ASAN) அமைப்பின் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய பார்பி, கை மற்றும் முழங்கைகளில் நெகிழ்வான மூட்டுகள், நேரடி கண் தொடர்பை தவிர்க்கும் பார்வை, போன்ற அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்டிசம் சிகிச்சையில் சிறப்பு பெற்ற அமெரிக்க குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு 1,000 பார்பி பொம்மைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் Mattel அறிவித்துள்ளது.
ஆட்டிசம் என்பது மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் உருவாகும் நரம்பியல் வளர்ச்சி நிலை ஆகும். தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் காரணம் என்ற கருத்துகள் அறிவியல் ஆதாரமற்றவை என நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.



