
கோத்தா கினாபாலு, அக்டோபர்-13 – தீபாவளியை முன்னிட்டு 9 அத்தியாவசியப் பொருட்களை விலைக் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட எலும்புடன் கூடிய செம்மறியாட்டு இறைச்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், தேங்காய், தேங்காய் துருவல், இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் சிறிய வெங்காயம், இறக்குமதியாகும் பெரிய வெங்காயம், ஆஸ்திரேலியா கடலைப் பருப்பு உள்ளிட்டவை அந்த 9 பொருட்களாகும்.
இந்த விலைக் கட்டுப்பாடு வரும் வியாழக் கிழமை முதல் அக்டோபர் 22 வரை அமுலில் இருக்குமென, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் மொஹமட் அலி தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் விலை நிலைத்தன்மையை உறுதிச் செய்வதையும், நியாயமற்ற விலை உயர்வுகளிலிருந்து பயனீட்டாளர்களைப் பாதுகாப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
என்றாலும், முடிந்தவரை அதிகபட்ச விலைக்குக் கீழே விற்கவும் வணிகர்கள் ஊக்குவிக்கப்படுவதாக, இன்று சபா, கோத்தா கினாபாலுவில் அத்திட்டத்தை தொடக்கி வைத்த பிறகு அவர் கூறினார்.
இவ்வேளையில், இந்த பெருநாள் காலம் முழுவதும் போதுமான அளவு பொருட்கள் கிடைப்பதை உறுதிச் செய்வதற்காக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சுடன் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் அர்மிசான் சொன்னார்.
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை பயனீட்டாளர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள ஏதுவாக, இளஞ்சிவப்பு விலைக் குறியீட்டு லேபிள்களை கொண்டிருக்கும் என்றார் அவர்.