போர்டிக்சன், டிசம்பர்-8 – KPKT எனப்படும் வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சின் கீழ் இயங்கும் மக்கள் வாங்கும் சக்திக்குட்பட்ட முதன்மை வீடமைப்பு நிறுவனமான பிரிமா (PRIMA), இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 8,900 புதிய வீடுகளை கட்டி முடிக்கும் கடப்பாட்டை தொடர்ந்து உறுதிச் செய்து வருகிறது.
நவம்பர் வரை நாடு முழுவதும் KPKT மேற்கொண்ட 54,660 வீடுகளை உட்படுத்திய 89 வீடமைப்புப் திட்டங்கள், பல்வேறு கட்டுமானக் கட்டங்களில் இருப்பதாக அமைச்சர் ஙா கோர் மிங் (Nga Kor Ming) கூறினார்.
அவற்றில் 41,321 வீடுகளை உட்படுத்திய 61 வீட்டுத் திட்டங்கள் முழுமைப் பெற்றுள்ளன.
13,339 வீடுகளை உட்படுத்திய மேலும் 28 திட்டங்கள் திட்டமிடல் மற்றும் கட்டுமானத்திலிருப்பதாக அவர் சொன்னார்.
மொத்தமாக 810 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 1,900-கும் மேற்பட்ட வீடுகளையும் பிரிமா வெற்றிகரமாக விற்றிருக்கிறது.
M40 தரப்பினர் மத்தியில் சொந்த வீடு வைத்திருப்போரின் எண்ணிக்கை இதன் மூலம் உயருவதோடு, பிரிமாவின் நிதி புழக்கத்தையும் இது வலுப்படுத்தியுள்ளது.
இவ்வாண்டு இதுவரை 6 ரெசிடென்சி வீடமைப்புப் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது குறித்தும் அமைச்சர் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
அவை முறையே நெகிரி செம்பிலானில் போர்டிக்சன் குடியிருப்பு, ஜோகூரில் லார்கின் இண்டா குடியிருப்பு, கோலாலம்பூரில் பிரிக்ஃபீல்ட்ஸ் குடியிருப்பு, மலாக்காவில் மலாக்கா தெங்கா 2 குடியிருப்பு, சிலாங்கூரில் காஜாங் நெக்சஸ் குடியிருப்பு, மற்றும் பினாங்கில் புக்கிட் குளுகோர் குடியிருப்பு ஆகும்.
சனிக்கிழமை, போர்டிக்சன் ரெசிடென்சி குடியிருப்புக்கான வீட்டுச் சாவிகளை உரிமையாளர்களிடம் வழங்கிய நிகழ்வில் பங்கேற்ற போது ஙா கோர் மிங் அவ்வாறு கூறினார்.
அந்நிகழ்வில் 20 உரிமையாளர்கள் தத்தம் வீட்டுச் சாவிகளை அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
659 terrace வீடுகளைக் கொண்ட இந்த போர்டிக்சன் ரெசிடென்சி குடியிருப்பு, கட்டி முடிக்கப்பட்டதற்கான CCC சான்றிதழை கடந்த ஏப்ரல் மாதமே பெற்று விட்டது.
The Edge Property Excellence Award 2024 விருதளிப்பில், நகர்ப்புற வாங்கும் சக்திக்குட்பட்ட வீடமைப்புத் திட்டற்கான பிரிவில் போர்டிக்சன் பிரிமா குடியிருப்பு சிறப்பு விருது வாங்கியுள்ளதையும் அமைச்சர் பெருமையோடு குறிப்பிட்டார்.