
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – கடந்த ஆகஸ்ட் 9 தேதி, ஸ்தாபாக் ஜாலான் ஆயேர் பானாஸ் விளையாட்டு அரங்கில், தாமான் மெலாவாத்தி மிழ்ப்பள்ளியின் 35வது, விளையாட்டு போட்டி விழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
இந்த விளையாட்டு போட்டியில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உட்பட சுமார் 700 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக, முன்னாள் தேசிய தடகள வீரர், மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவை பிரதிநிதித்தவர் மற்றும் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக தேசிய ஓட்டப்பந்தய சாதனையாளராக விளங்கி வரும் தான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். ஜெகதீசன் கலந்து கொண்டார்.
வெற்றி என்பது ஒரு பெரிய கனவில் தொடங்குகின்றது என்றும் தொடர் முயற்சியால் மட்டுமே அதனை நனவாக்க முடியும் என்றும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
இன்றைய காலகட்டத்தில் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்றும் அதனைப் பயன்படுத்தி எந்தத் துறையிலும் வெற்றி காணலாம் என்றும் அவர் மாணவர்களுக்கு உற்சாகமிக்க வார்த்தைகளை கூறினார்.
மேலும், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் , பள்ளி நிர்வாகக் குழு மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு, இந்த ஆண்டு விளையாட்டு விழாவை வெற்றிகரமாக நடத்தியமைக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். குணசேகரன், தங்களது பள்ளி விளையாட்டு விழாவிற்கு டான் ஸ்ரீ டாக்டர் எம். ஜெகதீசன் வருகை புரிந்தது மிகுந்த பெருமை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், PTA தலைவர் அன்பரசன், பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் டாக்டர் மகாகணபதி தாஸ் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜெகன் மாணிக்கம் ஆகியோரின் ஒத்துழைப்பிற்கும் நன்றியைத் தெரிவித்தார்.